யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன , இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து திரும்பும்போது தென்மராட்சி மறவன்புலவில் உள்ள சச்சிதானந்தன் அவர்களது இல்லத்தில் (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கடந்த 29.06.2023 அன்று மைத்திரிபால சிறிசேன , யாழ். மாவட்ட இந்துமத குருமார்கள் மற்றும் இந்துமத அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மறவன்புலவு சச்சிதானந்தன், இலங்கையில் இந்துக்களும் பௌத்தர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்தவர்கள் என்பதை வரலாற்று சம்பவங்களூடாக எடுத்துரைத்திருந்தார். இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மறவன்புலவு சச்சிதானந்தனின் அனுபவத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும், சமூக பணிக்கும் மதிப்பளிக்கும் விதமாக அவரது இல்லத்துக்கு செல்ல வேண்டுமென மைத்திரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது, இந்துமத நூல்கள், 15 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பன்னிரு திருமுறைகளின் சிங்கள மொழி பதிப்பு, சிவபெருமான் தொடர்பாக சிங்கள மொழி நூல், யாழ். மாவட்டத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளான இந்து ஆலயங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் பிரதி உள்ளிட்டவற்றை மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் பரிசளித்திருந்தார்.
இத்தருணத்தில், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே ,முன்னாள் பிரதி நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் வீட்டு முற்றத்து வேப்பமர நிழல் ஊஞ்சலில் அமர்ந்து இளைப்பாறிய மைத்திரிபால சிறிசேன , மறவன்புலவு வயல்களில் நெற்பயிர் விளைந்திருக்கும் தருணமொன்றில் இருவரும் மீண்டும் சந்திப்போம் என சச்சிதானந்தனிடம் கூறி விடைபெற்றுக் கொண்டார்.