“நாங்கள் ஏன் போராடுகின்றோம் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் நேற்று மீண்டும் ( நாலாம் கட்டம் ) ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த சிங்கள – பௌத்த பேரினவாதம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

எங்களுடைய தொடர் போராட்டத்துக்கு சாதகமான பதில் இற்றைவரை பொறுப்பு வாய்ந்த எவரிடம் இருந்தும் எமக்குக் கிடைக்கவில்லை. எனவே, எமக்கு வேறு மார்க்கங்களோ வேறு உபாயங்களோ கிடையாது.


எமது மக்களுடைய எதிர்கால இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சட்டவிரோத சிங்கள ஆக்கிரமிப்புக்களைத் தடுப்பதற்காகவும் மீண்டும் தையிட்டியிலே எங்கள் போராட்டத்தை தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்ற விடயம், சிங்கள மக்களையோ பௌத்த மதத்தையோ நாங்கள் வெறுக்கவில்லை. பௌத்தத்தை நாங்கள் நேசிக்கின்றோம். சிங்கள மக்களை நாங்கள் விரும்புகின்றோம்.


அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றோம். நாங்கள் தாழ்மையாகக் கேட்பது, நாங்கள் எவ்வாறு உங்களை மதிக்கின்றோமோ, உங்களது உணர்வுகளைப் புண்படுத்தாது செயல்படுகின்றோமோ அதேபோல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள்.


சிங்கள மக்களே நீங்கள், சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு அரசுக்கு அழுத்தத்தை கொடுங்கள். ஏனென்றால் தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிங்களச் சகோதரர்களுடைய, பௌத்த மதத்தவர்களுடைய வாழிடத்தை அழித்து அங்கே தங்கள் அடையாளங்களைப் பதிக்கவில்லை.


பதிக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் நாங்கள் சிங்கள மக்களையும் விரும்புகின்றோம், பௌத்த மத போதனைகளையும் விரும்புகின்றோம்.

ஆனால், இங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது புத்த பகவானுடைய அருமையான பௌத்த கோட்பாடுகளும் மீறப்பட்டு, அஹிம்சைக்கு முரணாக இராணுவமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து ஒரு சட்ட விரோதமான கட்டடத்தை இங்கே கட்டி இருக்கின்றார்கள்.


அதற்கு எதிராகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்த சட்டவிரோத கட்டடம் அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN