இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனம் ஒன்றை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த 3 பேர் பொலிஸாரிடம் கிராம அமைப்புக்களால் ஒப்படைக்கப்பட்டது.
வெள்ளைவான் புரளியால் வெள்ளை வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (16-05-2023) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் 3 பேரும் தமிழ் மொழியில் பேசாமையால் பிரதேச மக்களிற்கு சந்தேகம் ஏற்பட்டு கிராம அமைப்புக்களை அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதேச மக்களால் இதன்போது அமைதியின்னை ஏற்பட்டது. இதன்போது குறித்த சந்தேக நபர்களை தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டது.
குறித்த நபர்களை தாக்க முற்பட்டபோது பொது அமைப்புக்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸார் மூவர் முச்சக்கர வண்டியில் வருகை தந்தனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோது, தாங்கள் வியாபாரத்திற்காக வந்ததாகவும், தம்மை மக்கள் இவ்வாறு தடுத்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளிற்காக அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில் சந்தேக நபர்களை அழைத்து செல்ல முற்பட்டபோது பிரதேச மக்களால் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த வாகனம் தாறுமாறாக உடைக்கப்பட்டது. உள்ளே இருந்த பொருட்களும் வீசி உடைக்கப்பட்டது.
தொடர்ந்து வாகனத்தில் இருந்த சந்தேக நபர்களும் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டனர். பொலிஸாரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் முச்சக்கர வண்டியில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். காயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.