ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொலை சம்பவம் பதிவாகும் சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது.
சாதாரண குடும்ப தகராறு தொடக்கம் பரம்பரை பகை வரையில் அனைத்து விடயங்களுக்கும் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதனை உறுதிப்படுத்துவதாகவே கடந்த மாதம் நெடுந்தீவை உலுக்கிய படுகொலைகள் அமைந்தன.
நெடுந்தீவு…!
இந்த கொலைகள் அதன் பின்னணி என்பவற்றை ஆராய்வதற்கு முன்னர் நெடுந்தீவை பற்றிய சில விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இன்று பல அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும் அதன் அமைவிடத்தையும் அதனூடாக மேற்கொள்ளக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளையும் மையமாக கொண்டு இலங்கையுடன் ஒட்டி உறவாடும் பல நாடுகள் உள்ளன.
இதேபோன்றொரு அமைவிட முக்கியத்துவத்தை கொண்ட இடமாக தான் நெடுந்தீவு உள்ளது.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாக நெடுந்தீவு உள்ளது.
சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவாக நெடுந்தீவு அமைந்துள்ளது.
தீவு முழுவதும் பவளம், சுண்ணாம்புக் கல்லை அடிப்படையாகக் கொண்டது.
இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
மேலும் இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை என தெரியவருகின்றது.
இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள்.