இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட 7.3 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் மீளப் பெறப்பட்டது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கைக்கு அமைய பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.9 மெக்னிடியுட்டாக இருந்தது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
84 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நில அதிர்வை தொடர்ந்து பல பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.