கடந்த 10 வருடத்திற்கு மேலாக ரூபா 250 இற்கு சேவையாற்றும் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது புகையிரத திணைக்களத்தினுள் நிரந்தர நியமனம் தருமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று (6) வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை வாழைச்சேனை புகையிர நிலையத்தில் ஒன்று கூடியவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு வாழைச்சேனை பிரதான கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாக நடந்து வந்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசே நிரந்தர நியமனத்தை தா, சம்பளத்தினை அதிகரித்து தா. என்பன போன்ற கோரிக்கை அடங்கிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை தீர்வு பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக இதன்போது தெரிவித்தார்.
மேற்படி பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் வாழைச்சேனை பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான 26 புகையிரத கடவவையில் 78 பேர் கடமை பரிந்து வருக்கின்றனர்.கடந்த 2013.7.11 ஆம் திகதி சேவைக்கால அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் பணியாற்றி மாதாந்த சம்பளமாக ரூபா 7500 பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய விலைவாசி அடிப்படையில் இதனைக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளமுடியாது என்று கவலை கூறுகின்றனர்.
அத்துடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்த பணிக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் இதனால் தங்களது கடமைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தங்களையும் குறித்த கடமைக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கி பணியமர்த்தி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.