குருநாகலில் பலரின் உயிரை காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகலில் கடந்த வாரம் உயிரிழந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்டு பலர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான நிலையில், விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்த மாணவன் தொடர்பில் மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது.
குருநாகல் – தெமட்டலுவ பிரதேசத்தை சேர்ந்த, மலியதேவ பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர் பிரவீன் பண்டாரவின் உடல் உறுப்புகள், ஆபத்தான நோயாளிகளுக்கு தானம் செய்வதற்காக நேற்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிரிழந்த பிரவீன் தனது தாய், தனது இளைய சகோதரன் மற்றும் சகோதரியுடன் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வீரம்புகெதர பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிரவீனின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பிரவீனின் அண்ணன் முகத்தில் காயம் ஏற்பட்டு பற்கள் சேதமடைந்ததுடன், சகோதரியின் கை முறிந்து காயம் ஏற்பட்டது.
இவர்கள் அயலவரின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன் அவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இருப்பினும், விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
மூளைச்சாவு அடைந்த பிரவீனின் உடல் உறுப்புகளை தீவிர நோயாளிகளுக்கு தானமாக வழங்கலாம் என பிரவீனின் தந்தையிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தை தொழிலில் மரப்பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தாய் ஒரு இல்லத்தரசியாகும். அதற்கமைய, பிரவீனின் தந்தையின் விருப்பத்திற்கமைய, நேற்று பிரவீனின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண் சவ்வுகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டன.
பிரவீனின் தாயாரின் இறுதிச் சடங்குகள் நடந்த அடுத்த நாள் இந்த உடல் உறுப்புக்கள் தானம் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் வடமேற்கு றோயல் கல்லூரியில் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிரவீன், அந்த பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாம் ஆண்டில் மலியதேவ கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளுடன் சித்தியடைந்த அவர், விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்க கடந்த வருடம் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.
படிப்பில் சிறந்து விளங்கிய பிரவீன், இசையில் தனது திறமையால் சிறுவயதிலேயே இசை தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பிரவீன் மெல்லிசை குரல் கொண்ட திறமையான பாடகர். யூடியூப் சேனலில் அவரது பல பாடல்கள் தற்போது பிரபலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.