தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது.
ரி20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது.
இதன்போது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் ஜொன்சன் சார்லஸ் அதிகப்பட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 259 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி டி கொக்கின் அதிரடி ஆட்டத்தில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் டி கொக் 100 ஓட்டங்களையும், ரிஷா ஹென்ரிக் 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
இந்த சேஸிங்கின் மூலம் ரி 20 போட்டியொன்றில் அதிகூடிய ஒட்ட இலக்கை கடந்த அணி என்ற சாதனையை தென்னாபிரிக்கா அணி படைத்துள்ளது.
முன்னதாக , கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியொன்றில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 434 என்ற வெற்றி இலக்கை 49.5 ஓவர்களில் கடந்து தென்னாபிரிக்கா அணி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.