புஸ்ஸல்லாவ தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணனி பொறியியலாளரான பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மிரிஹான தலைமையக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எல்பொட கட்டுபிட்டிய, பபேகம ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா என்ற 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான காரணம்
கணவன், மனைவி இருவரும் கொழும்பில் இருந்து புஸ்ஸல்லாவைக்கு ஒன்றாக வந்துள்ளதாகவும் புஸ்ஸல்லாவ நகரில் பொறியியலாளர் விவாகரத்து கோரி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.