இலங்கையில் 15% பெண்களும் 6.3% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தி மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் :- பெண்களிடையே உடல் பருமன் மற்றும் அதிக எடை 2021 இல் 43% ஆக அதிகரித்துள்ளதாகவும், 2015 இல் இது 34% ஆக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அடிப்படையில் அதிக எடை மற்றும் உடல் பருமன் தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரங்களின்படி ஆரோக்கியமான நபரின் பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
“30க்கு மேற்பட்ட பிஎம்ஐ உடல் பருமனாகவும், 25 முதல் 29.9க்கு இடைப்பட்ட பிஎம்ஐ அதிக எடை கொண்டதாகவும் கருதப்படுகிறது. ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் பிஎம்ஐ 23 ஆகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உணவு முறை நேரடியாக உடல் பருமன் மற்றும் அதிக எடைக்கு வழிவகுக்கும் என்று கூறிய டாக்டர் குணவர்தன இதய நோய்கள், நீரிழிவு, நுரையீரல் நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகள் உடல் பருமனால் ஏற்படுவதாக கூறினார்.