அக்கரைப்பற்று பகுதியில் பழக்கடையொன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பழம் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று – கல்முனை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பழக்கடைக்கு சென்று 5 ஆயிரம் ரூபா தாளொன்றை வழங்கி 24 வயதுடைய மாணவன் பழமொன்றினை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து கடை உரிமையாளர் போலி நாணயத்தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடமிருந்து மேலும் இரு 5000 ரூபா போலி தாள்கள் உட்பட மூன்று 5000 ரூபா போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.