மார்ச் மாதம் புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களையும் நியமிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் அமைச்சரவை மீளாய்வு குழுவில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரே தடவையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
இந்த வருடத்தில் ஒரே தடவையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேற்படி 26,000 ஆசிரியர் நியமனங்களுக்காக தற்போது அரச சேவையிலுள்ள 40 வயதுக்குக் குறைந்த பட்டதாரிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களுக்காக பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், கணிதம் உட்பட உயர்தர பாடங்களுக்காக இந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறும் 8,000 ஆசிரியர்கள் ஆரம்ப வகுப்பிலிருந்து க.பொ.த சாதாரணதர வகுப்பு வரை கற்பிப்பதற்காக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
பாடசாலைகளில் 60 வயது பூர்த்தியடைந்த ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி 26,000 ஆசிரியர்களுள் 4,000 பேர் தேசிய பாடசாலைகளுக்கும், 22,000 ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.