வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிட்னி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை
அவுஸ்திரேலியாவின் சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சிட்னி கிழக்கு ரோஸ் பே என்ற இடத்தில் வசிக்கும் 29 வயதான யுவதி தாக்கல் செய்த வன்புணர்வு சம்பந்தமான முறைப்பாட்டுக்கு அமைய கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹொட்டலுக்கு சென்று சிட்னி பொலிஸார், தனுஷ்க குணதிலக்கவை கைது செய்தனர்.
11 நாட்கள் பார்க்லீ தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குணதிலக்க, நவம்பர் 17 ஆம் திகதி கடுமையான நிபந்தனைகளின் கீழ்2 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவரது கடவுச்சீட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை வெளியில் பயணங்களை மேற்கொள்ள தடை
தனுஷ்க குணதிலக்கவுக்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வெளியில் பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாட்டாளரான யுவதியை தொடர்புக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் டின்டர் உட்பட மென் பொருள் செயலிகளை பயன்படுத்தக் கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இனி வரும் காலங்களிலும் செல்லும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் அவரது சட்டத்தரணி முன்னிலையானார். சட்டத்தரணி முன்னிலையாகியதால், பெப்ரவரி மாதமும் குணதிலக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதில் விலகுக்கு அளிக்கப்பட்டுள்ளது.