இலங்கையில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து வேதனையளிப்பதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைக்கு அரச அதிகாரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் என்றும் இல்லாதவாறு நான்கரை இலட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் இதனால் அவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
கவனயீனத்தால் ஏற்பட்ட கதி
இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே பேராசிரியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று இலங்கையில் இருக்கும் இளைஞர்களில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது எல்லோருக்கும் மிகவும் வேதனை அளிக்கின்ற செய்தி.
ஒட்டுமொத்தமாக நாட்டின் சனத்தொகையை பார்க்கும்போது, நான்கரை இலட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது மிக மிக வேதனையான செய்தி. உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டினுடைய அதிகாரிகள் மற்றும் கொள்கைத் திட்டமிடலாளர்களின் கவனயீனம் காரணமாகத்தான் இந்த இளைஞர்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றார்கள்.
இளைஞர்களுக்கு போதைவஸ்த்துக்களை பெறுவதற்கான வாய்ப்புக்களை அரச அதிகாரிகள் தான் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நான் திட்டவட்டமாக கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.