மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

வீட்டின் மேல் மாடியில் மருமகனுக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, மாமனாரும், மாமியாரும் கீழே விழுந்துள்ளனர்.

சம்பவத்தில் 66 வயதான மாமனார் உயிரிழந்துள்ளதுடன் 62 வயதான மாமியார் படுகாயமடைந்த நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான மருமகன் கடற்படையில் கடமையாற்றி வருவதுடன் கடந்த 13 ஆம் திகதி அயல் வீட்டில் நடந்த விருந்தொன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.

அந்த விருந்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் கூறியுள்ளனர். எனினும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்தேக நபர் அந்த விருந்தில் கலந்துககொண்டுள்ளார்.

விருந்து முடிந்து வீடு திரும்பிய மருமகனுடன் சண்டை

விருந்து முடிந்து சந்தேக நபர் வீடு திரும்பிய பின்னர் அவரது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் இடையில் பாதியளவில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் மேல் மாடியில் சண்டை ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது சந்தேக நபரும் அவரது மாமனாரும் கட்டி புரண்டுள்ளதாகவும் இதன் போது பாதுகாப்பு சுவர் இல்லாத மேல் மாடியில் இருந்து மாமனார் கீழே விழுந்துள்ளார். அவர் மீது மாமியாரும் விழுந்துள்ளார்.

எனினும் சந்தேக நபர் மாமனார் மற்றும் மாமியாரை மேல் மாடியில் இருந்து தள்ளிவிட்டாரா என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்தி வருவதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 40 வயதான சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்லைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor