பாரிஸில் தந்தை ஒருவர் தனது 21 வயதுடைய மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த குறித்த தந்தை மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சென் எ மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட மெசுர் சென் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 73 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில், அவரது மகன் வீதியில் சென்ற இளைஞன் ஒருவனை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவரது தந்தையிடமும் பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்தே அவர் கைத்துப்பாக்கி ஒன்றினால் மகனை சுட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை 30 வயதிற்குட்பட ஒருவர் வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் வருகைத்தந்து காயமடைந்தவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரது மனைவியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முதியவராகும்.
பலரின் பாதுகாப்பினை கருதியே இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.