தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை!

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 27 வயதான முனவ்வர் மொஹமட் ஜினாத் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் கோரிக்கை

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அவசியமென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

154 பேர் உயிரிழப்பு

இதனிடையே, சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் தென் கொரியாவுக்கு சென்றவர் அல்லவென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் R.P.A.விமலவீர தெரிவித்துள்ளார்.

சியோல் நகரில் இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 154 பேரது இறுதி சடங்குகள் நேற்று இடம்பெற்றது.

இறுதி சடங்கிற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுகொண்டுள்ளது.

நெரிசலில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor