ஹட்டன் – கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாடசாலை பேருந்து ஒன்றினை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
எதிர்க்கட்சியின் தலைவரின் அன்பளிப்பு
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து பாடசாலை வாயில் வரை பேரூந்தை ஒட்டி வந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அங்கு மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் தமக்கான பேருந்தினை வரவேற்றனர். பின்னர் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடன மற்றும் கலை நிகழ்வுகளோடு நிகழ்வுள் சிறப்பாக நடைபெற்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 38ஆவது பேருந்து இது என்பது விசேட அம்சமாகும்.