பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி
2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 22,23,24 ஆகிய 3 நாட்கள் நேற்று மாலைவரை கம்பகாவில் நடைபெற்றது.
இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகொண்டதுடன் 5 பேர் காலிறுதிவரை முன்னேறியதுடன் கலைமகள் வித்தியாலய 7 மாணவர்கள் பங்குகொண்டனர் ஒருவர் இறுதிவரை முன்னேறினார்.
வட மாகாணம் சார்பாக, இவ் வட மாகாணத்தில் போட்டிகள் நடைபெறாத நிலையில் முல்லைத்தீவு பாடசாலைகள் மாத்திரம் இவ் மல்யுத்த போட்டியில் நேரடியாக தேசிய போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
மாணவர்கள் பெற்றுக்கொண்ட பதக்கங்கள்
இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவன் ஆர்.றஜிதன் தங்க பதக்கத்தையும்(1ம் இடம்) கலைமகள் வித்தியாலய மாணவன் ஜெயானந்தராசா வினேசன் 51-55 கிலோ கிராம் பிரிவு வெள்ளிப் பதக்கம்(2ம் இடம்) பெற்றிருந்தார்.
இந்த வீரர்களுக்கான பயிற்சியினை மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஆதரவு ஒழுங்குபடுத்தல்களுடன் மாவட்ட மல்யுத்த பயிற்றுனர் பி.தர்சன் அர்பணிப்புடன் வழங்கி வருகிறார்.
இந்த சாதனைக்கு பாடசாலை நிர்வாகம், அதிபர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர், பழைய மாணவர்கள், பெற்றோர்களின் அதீத அக்கறை இவ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகளின் முதற் தடவையான மாவட்ட வரலாற்றுச் சாதனைக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.