வவுனியாவில் கோதுமைமா விலை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக நிலையங்களில் அவ்வாறான விலை குறைப்பு செய்யப்படவில்லை என தெரிவிக்கும் நுகர்வோர் தொடர்ந்தும் 400 ரூபாவிற்கே கோதுமை மாவினை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் அவர்கள் கோதுமை மா மொத்த விற்பனை நிலையத்தினை திடீர் பரிசோதனை செய்யும் போது பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக தனியார் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கேட்டபோது, தமது வர்த்தக நிலையங்களுக்கு கோதுமை மா மொத்த விற்பனையாளர்களின் வாகனங்களிலேயே கோதுமை மா கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் பைக்கற்றில் அடைக்கப்பட்ட மாவே தம்மிடம் உள்ளதாகவும் தெரிவிப்பதால் அதனையே தாம் கொள்வனவு செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு கோதுமை மா மொத்த விற்பனையாளர்களினால் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்படும் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மா பிறிதொரு முகவரியிடப்பட்டு காணப்படுவதனால் தமக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே வவுனியா அரசாங்க அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தி திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளும் போதே மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor