களு கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மில்லகந்தை பகுதியில் களு கங்கையின் நீர் மட்டமானது 7.97 அங்குலமாக அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதேவேளை அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதால், சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், கிங் கங்கையின் நீர்மட்டமும் பத்தேகம பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அபாய எச்சரிக்கை
மேலும் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நுவரெலியா, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் வலலாவிட்ட, இங்கிரிய, பாலிந்த நுவர மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், கலவானை மற்றும் எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரை
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து பிரதேச செயலாளர்களும் அமைச்சுக்களும் ஒருங்கிணைந்து செயற்படுமாறும், நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.