மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பொறுப்பு

சவூதி அரேபியா: மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பொறுப்பு

ஆக்கம்: காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்.

சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது. ஈகை, மனிதாபிமான ஒருமைப்பாடு மற்றும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான பொறுப்புக்கூறல் போன்ற ஆழமான விழுமியங்களின் அடிப்படையிலேயே இந்த அணுகுமுறை அமைந்துள்ளது. எந்தவித பாகுபாடும் இன்றி, மனித கண்ணியம் மற்றும் கௌரவமான வாழ்வுக்கான உரிமையை மட்டுமே கருத்திற்கொண்டு சவூதி அரேபியா இப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

 

2025 ஆம் ஆண்டில், மனிதாபிமான உதவிகளை வழங்கும் நாடுகளின் வரிசையில் உலக அளவில் இரண்டாம் இடத்தையும், அரபு உலகில் முதலிடத்தையும் பெற்று சவூதி அரேபியா ஒரு குறிப்பிடத்தக்க சர்வதேச சாதனையைப் படைத்துள்ளது. அத்துடன், யேமன் நாட்டு மக்களுக்கு அதிகளவு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலும் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. இது சர்வதேச அரங்கில் சவூதியின் மனிதாபிமான மற்றும் தார்மீக அர்ப்பணிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

 

இந்தச் சிறப்பானது, சவூதி அரேபியாவின் மனிதாபிமான அமைப்பான ‘கிங் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின்’ (KSrelief) கடின உழைப்பால் கிடைத்த ஒரு பெறுபேறாகும். இந்த மையம் பல நாடுகளில் நிவாரண மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து, சர்வதேச பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மிகவும் தொழில்முறை சார்ந்த மற்றும் வெளிப்படையான முறையில் லட்சக்கணக்கான பயனாளிகளின் துயரங்களைத் துடைக்கப் பாடுபட்டு வருகின்றது.

 

சர்வதேச பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பலப்படுத்துவது என்பது, மனிதாபிமான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது, அபிவிருத்திப் பாதைகளை ஆதரிப்பது மற்றும் மனித வளத்தில் முதலீடு செய்வதில்தான் தங்கியுள்ளது என்ற சவூதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வையை இந்தச் செயற்பாடு மெய்ப்பிக்கின்றது. உடனடி நிவாரணங்களுக்கு அப்பால், நீண்டகால தீர்வுகளை உருவாக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதிலும் சவூதி அரேபியா உறுதியாக உள்ளது.

இந்த அடிப்படையில், யேமன் சகோதர மக்களுக்கு சவூதி அரேபியா வழங்கும் ஆதரவானது அதன் மனிதாபிமான அர்ப்பணிப்புக்கு ஒரு தெளிவான உதாரணமாகும். சுகாதாரம், உணவு, கல்வி மற்றும் அபிவிருத்தி எனப் பல துறைகளில் இந்த உதவிகள் தொடர்கின்றன. இது ஒரு சகோதரத்துவப் பொறுப்புடன், அங்குள்ள மக்களின் கஷ்டங்களைக் குறைத்து அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்றது.

 

இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தாராளமான ஆதரவுடனும், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் நேரடி வழிகாட்டலிலும் இந்த மனிதாபிமானப் பணிகள் ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இது நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

சவூதி அரேபியா, இறைவனின் உதவியுடன் தனது சர்வதேசப் பொறுப்பையும் ஆழமான விழுமியங்களையும் கொண்டு மனிதாபிமானப் பணியில் தொடர்ந்து முன்னின்று செயற்படும். எங்கு மனித நேயம் பாதிக்கப்பட்டாலும் அதற்குத் துணையாகவும், நம்பிக்கையான உலகைக் கட்டியெழுப்ப ஒரு நம்பகமான பங்காளியாகவும் சவூதி அரேபியா எப்போதும் இருக்கும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.

Recommended For You

About the Author: admin