கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..?

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..?

கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்று (31) அதனை இரண்டாவது முறையாக சமர்ப்பித்து வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர் தனது மனசாட்சியைத் தட்டி எழுப்பி வினவ வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

 

இன்று வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க முடியாமல் போனது எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததினால் அல்ல, தமது உறுப்பினர்கள் சபையில் இல்லாததாலேயே என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ரைஸா சரூக் தெரிவித்தார்.

 

இதன்போது இரண்டு உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகவும் மற்றுமொரு உறுப்பினருக்கு தனிப்பட்ட காரணம் காரணமாக வாக்கெடுப்புக்கு முன்னர் சபையிலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒருவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் தடுத்து வைத்திருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரைஸா சரூக் இது குறித்துத் தெரிவிக்கையில்,

 

“கொழும்பு வரவு செலவுத் திட்டத்தில் இன்று ஆளும் கட்சி வெற்றி பெற்றது. எமது உறுப்பினர் ஒருவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் காலையிலேயே வீட்டிற்குச் சென்று அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தனர்.

 

மேலும் இரண்டு உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். வீட்டிற்குச் சென்று பார்த்தோம், அந்த இரண்டு உறுப்பினர்களும் இல்லை.

 

அப்படியென்றால் அங்கேயும் எங்களுக்கு 2 வாக்குகள் இல்லை. அதேபோல மற்றுமொரு உறுப்பினரின் மனைவிக்கு மாரடைப்பு எனக் கூறி வாக்கெடுப்பு நெருங்கும் நேரத்தில் அவருக்கு வெளியேற நேரிட்டது.

 

அதேபோல எம்முடன் இருந்த உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சிக்கு வாக்களித்தார். இங்கு என்ன நடந்துள்ளது என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது.”

 

“அன்று முதல் தடவையாக வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போது மேயர் கூறியதைப் போன்று, மனசாட்சியைத் தொட்டுப் பார்க்குமாறு நாம் அவருக்குக் கூறுகிறோம். இன்று பெரும்பான்மையை எவ்வாறு பெற்றீர்கள் என்று மனசாட்சியைத் தட்டிப் பார்த்துக் கேளுங்கள்.”

 

“எங்களுக்கு பெரும்பான்மை இல்லாததினால் அல்ல இன்று நாம் தோற்றோம். உறுப்பினர்கள் இங்கு இல்லாததினாலேயே நாம் தோல்வியடைந்தோம். நாம் எதிர்காலத்திலும் எமது பெரும்பான்மையைப் பாதுகாத்துக் கொண்டு எமது நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என்றார்.

 

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று மேலதிக இரண்டு வாக்குகளால் வெற்றி பெற்றது.

 

அதற்கமைய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 56 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

 

கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அங்கு அது தோல்வியடைந்தது.

 

முதலாம் முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகள் கிடைத்ததுடன், ஆதரவாக 57 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

 

இவ்வாறான பின்னணியில் இன்று மீண்டும் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை மேயர் வ்ராயி கெலி பல்தஸார் சபையில் சமர்ப்பித்தார்.

 

அதற்கமைய கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரண்டாவது முறையாக நடைபெற்ற வாக்கெடுப்பில் அது மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Recommended For You

About the Author: admin