தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது – ஆயுதங்களும் மீட்பு
தெஹிவளை, படோவிட்ட பகுதியில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண (தெற்கு) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர் பிடிபட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: கடந்த 6ஆம் திகதி இரவு தெஹிவளை, வனரதன வீதி ‘ஏ’ குவாட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் காயமடைந்த இருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார். இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் கும்பலைச் சேர்ந்த ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் நெருங்கிய ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டார்.
சுற்றிவளைப்பும் கைதும்: கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, கடந்த புதன்கிழமை பொரலஸ்கமுவ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது களுபோவில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பெல்லன்வில பகுதியில் மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘போர் 16’ ரக துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுத் தொடர்பு: தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவரின் நேரடி வழிகாட்டலின் கீழேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

