காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூவர் கைது..!

சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய மிகிந்தலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காட்டு யானையைத் தீயிட்டுத் துன்புறுத்தும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
இத்துன்புறுத்தலுக்கு உள்ளான காட்டு யானை மிகிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீப்புகுளம பகுதியில் உயிரிழந்திருந்தது.

யானையின் இறப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை மற்றும் தீக்காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி ஆகிய காரணங்களால் மரணம் சம்பவித்துள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, காட்டு யானைக்குத் தீ வைத்து மிருக வதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த 42, 48 மற்றும் 50 வயதுடைய மூவர் நேற்று (17) மாலை மிகிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (18) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin