மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி..!
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.4 சதவீத நேர்மறையான வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“பொருளாதாரத்தின் பொதுவான விலைக்குறியீடு 2025 மூன்றாம் காலாண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியமையும், பெரும்பாலும் ஸ்திரமாக இருந்த இலங்கை ரூபாவின் வெளியகப் பெறுமதி பிரதான நாணயங்கள் சிலவற்றுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தமையும் முயற்சியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.
இதற்கிடையில், 2025 மூன்றாம் காலாண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள், முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக உயர் மட்டத்தில் காணப்பட்டன.
மிகவும் முக்கியமான விடயமாக பெரும்பாலும் நிறுவன மற்றும் தனியார் துறையின் ஊடாக விரிவடைந்த உள்நாட்டு கடன் வழங்கல், இலங்கை பொருளாதாரத்தில் பதிவான 5.4 சதவீத வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
2025 மூன்றாம் காலாண்டில் நிதிச் செயற்பாடுகளில் பதிவான குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் மூலம் இது மேலும் பிரதிபலிக்கிறது.
இதற்கு மேலதிகமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு, முதலீட்டுப் பொருட்களின் விநியோகம் அதிகரிப்பு மற்றும் இடைநிலைப் பொருட்களின் இறக்குமதிச் செலவு குறைவடைதல் என்பன இடம்பெற்றன.
எனவே, பல உற்பத்தித் தொழில் பொருளாதாரச் செயற்பாடுகள், நிர்மாணத் துறை மற்றும் தங்குமிடம் மற்றும் உணவு பானங்கள் வழங்கல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல சேவைப் பொருளாதாரச் செயற்பாடுகளில் பதிவான வளர்ச்சிக்கு இது அடிப்படையாக அமைந்தது.”
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் பின்வருமாறு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன:
விவசாயம் – 3.6%
கைத்தொழில் – 8.1%
சேவைகள் – 3.5%

