இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோக்கள் (சுமார் 640 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) வரை நிதியுதவியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் 500,000 யூரோக்கள், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் பேரவையின் (International Federation of Red Cross and Red Crescent Societies) பேரிடர் மீட்பு அவசர நிதியத்தின் மூலம், அவசர தங்குமிடம், உணவு மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக அனுப்பப்படுகின்றன.
நிதியுதவியுடன் சேர்த்து, ஐரோப்பிய ஒன்றியம் தனது சிவில் பாதுகாப்பு பொறிமுறை மூலம் பொருளுதவியையும் அனுப்பி வருகிறது
ஜெர்மனி நாடானது 4,600 தங்குமிடப் பொருட்களை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் 3,400-க்கும் மேற்பட்ட அவசரகாலப் பொருட்களை அனுப்புகிறது.
இத்தாலி மீட்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பிற்கு உதவ ஒரு பொறியியல் நிபுணர் குழுவை களமிறக்குகிறது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் தனது கோப்பர்நிக்கஸ் விரைவு வரைபடச் சேவையை (Copernicus rapid mapping service) செயல்படுத்தியுள்ளது. இது, உள்ளூர் அதிகாரிகள் அனர்த்தத்தின் அளவை மதிப்பிடவும், நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில் செயற்கைக்கோள் வரைபடங்களை வழங்கும்.

