ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..!

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..!

பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணை இடம்பெற்றது.

 

கைது செய்யப்பட்ட பின்னர், விக்ரமசிங்கவுக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் நாயகம் தீலீப் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் தடுப்புக்காவலில் இருந்தபோது அவரது நடத்தையையும் அவர் விமர்சித்துள்ளார்.

 

பொதுவாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் பொது அறைக்கு மாற்றப்படுவார்கள். எனினும் இந்த சந்தேகநபர் மறுநாளே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் ரணில் விக்ரமசிங்க சிரித்துக்கொண்டே, மருத்துவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் என்றும் திலீப பீரிஸ் கூறியுள்ளார்.

 

சந்தேகநபர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கும்போது போரிஸ் ஜோன்சனின் புத்தகங்களை வாசித்தமை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

ரணில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பல்வேறு நபர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரணில் விக்ரமசிங்க ஒரு சாதாரண சந்தேகநபர் அல்லவென குறிப்பிட்ட மன்றாடியார் நாயகம், அவர் 36 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய நபர் என்று திலீப பீரிஸ் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin