வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு நடத்தல் வேண்டும்..!
வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தினுடைய காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வடக்கில் பெரும்பாலான முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆறாயிரம் தொடக்கம் பத்தாயிரம் ரூபாய் வரையிலே கொடுப்பனவு கிடைக்கின்றது.
அவர்களுக்கு விடுமுறையோ அல்லது ஓய்வூதியமோ கிடையாது.
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி போதிப்பதற்குரிய தராதரம் கிடையாது.
தராதரம் இல்லாத ஆசிரியர்களிடம் கற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அதனடிப்படையில் கல்வி அபிவிருத்திக் குழுமம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஊடாக டிப்ளோமா பயிற்சியை வழங்கி வருகின்றது.அதற்கான செலவை கல்வி அபிவிருத்திக் குழுமம் பொறுப்பேற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 3200முன்பள்ளி ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதிலும் டிப்ளோமா கற்கைக்காக சில நூறு ஆசிரியர்களையே ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்திற்குள் உள்ளெடுத்து பயிற்சி வழங்க முடிகின்றது.
வடக்கில் முன்பள்ளி கல்வியை சிறப்பாக முன்னெடுக்க சிறந்த முன்பள்ளிகள்,ஆசிரியர்கள், அதேநேரம் முன்பள்ளிச் சிறார்களும் தேவைப்படுகின்றனர்.
வடக்கு மாகாண கல்வி தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி அவசரமாக மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும்.
சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது வடக்கில் கல்வி தொடர்பான மாநாடு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன்பின்னர் அவர் பிரித்தானியா வந்த போதும் அது தொடர்பில் ஞாபகப்படுத்தினேன். ஆனால் அவர் அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
வடக்கு மாகாணத்திற்கு தற்போது கல்வி மாத்திரமே அத்தியவசியமானதாகக் காணப்படுகின்றது.
எனவே தற்போதைய அரசாங்கம் மற்றும் வடக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்,அதிகாரிகள் மிக விரைவாக வடக்கு மாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பில் மாநாடு ஒன்றினை நடத்தி வடக்கு மாகாண கல்வியையும்-முன்பள்ளிக் கல்வியையும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.

