வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..!
வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தல் மற்றும் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அது அரசாங்கத்துக்கு அழுத்தமாக அமையுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொய்யான தகவல்களை முன்வைத்தே, நிர்வாக முடக்கலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பானதல்ல.
வடக்கு கிழக்கில் தற்போது இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த காணிகளை அரசு வேறு பணிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வழங்க முடியும். அவ்வாறானதொரு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை இருப்பதானாலேயே, 200 பேர் இருந்த இராணுவ முகாம்களில், இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 – 8 மாதங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin