பரீட்சை வினாத்தாள் கசிவு: உப அதிபருக்கு விளக்கமறியல்!
வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.
சந்தேக நபர் இன்று அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சீல் வைக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களை வேண்டுமென்றே குளறுபடி செய்து தம்புத்கம பிரதேசத்தில் உள்ள கல்வி வகுப்பு ஆசிரியருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி அரசாங்கத்திற்கு 11.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதால் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.