இந்தோனேஷியா அருகே உருவாகிய காற்று சுழற்சியொன்று மேற்கு நோக்கி நகர்ந்தபடி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தெற்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது.
இது மேலும் மேற்கே நகர்ந்து நாளை சனிக்கிழமை 18.01.2025 அளவில் தென்னிலங்கை கடற்பரப்புக்கு நெருக்கமாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, நாளை 18 ஆம்திகதி காலைமுதல் இலங்கையின் கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமான வெப்ப நீராவியை கொண்டுவரும் கிழக்கு காற்றலை தீவிரமாக காணப்படும்.
இதனால் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அடுத்துவரும் 3 நாட்களுக்கு 100 மிமீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுடன் திசைமாறும் மேற்கத்தைய இடையூறு மற்றும் சராசரிக்கும் அதிகமான வடஇந்திய வறண்ட பனிக்காற்றின் வருகை போன்ற காரணிகளால், இம்முறை வடக்கு மாகாணத்தின் மீது அடர்ந்த மழை மேகங்கள் குவிக்கப்படக்கூடிய அளவு கணிசமான அளவில் குறைவாக காணப்படும்.
இதனால் வடக்கில் தொடர் பெருமழைக்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.!
ஆக, வடக்கை பொறுத்தவரை நாளை சனிகிழமை மாலைமுதல் மேகமூட்டத்துடன் கூடிய தூறல் ஆரம்பிப்பதுடன், 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் அவ்வப்போது அதிகரித்த மழையுடனான வானிலையும் வன்னி பெருநிலப்பரப்பில் விட்டுவிட்டு 50மிமீ வரையான சராசரி மழைவீழ்ச்சியும் எதிர்வுகூறப்படுகிறது.
மேலும் சுழற்சி முன்னேற முடியாமல் இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிலேயே அகன்ற சுழற்சியாக நீடிக்கும் என்பதால் திங்கள், செவ்வாய் தினங்களிலும் pull effect மூலம் ஈர்க்கப்படும் இழுவை முகில்களின் பாதையில் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் காணப்படும் என்பதால் அவ்வப்போது வடகிழக்கில் விட்டுவிட்டு மழையுடனான காலனிலை நிலவக்கூடும்.
மேலும் வருகின்ற செவ்வாய் 21 ஆம் திகதியுடன் இந்த சுழற்சியினால் இலங்கைக்கு கிடக்கப்போகும் மழையானது முற்றாக விலகுமெனவும் தற்போதைய நிலையில் கணிக்கப்படுகின்றது.!
இவற்றை கருத்தில் கொண்டு வடக்கு கிழக்கு விவசாயிகள் தமது விதைப்பு மற்றும் அறுவடை செயற்பாடுகளை திட்டமிடுவது நன்று.