இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்!
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் (Ashoka Peiris) நியமிக்கப்பட்டுள்ளார்.
அசோக பீரிஸ் நீர் வழங்கல், சுதேச வைத்தியம் மற்றும் காணி அமைச்சுக்களின் செயலாளர் உட்பட நிர்வாக சேவையில் 10 வருடங்களாக உயர் பதவிகளை வகித்துள்ளார்.
அவர் 2015 முதல் 2016 வரை இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அசோக பீரிஸ்,
அரசாங்கத்திற்கு சொந்தமான மிகவும் பெறுமதியான பொது நிறுவனங்களில் ஒன்றான இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தை முழு வெளிப்படைத்தன்மையுடனும் முறையான முறைமையுடனும் நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
சுரங்க நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கைக்கு டொலர்களை சம்பாதிப்பதற்கான முக்கிய வழிவகைகளில் ஒன்றாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.