ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷில்ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பங்களாதேசில் ஹசீனா அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்தச் சூழ்நிலையில் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) ஹசீனா முன்னாள் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை ஆலோசகர் டோஹி ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது “ஷேக் ஹசீனா மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசுக்கு தூதரக ரீதியாக கடிதம் எழுதி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.