கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ. 2,371 மில். இந்திய நிதியுதவி

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ. 2,371 மில். இந்திய நிதியுதவி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2371 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் துறைகளில் கவனம் செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் கீழ் 33 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாண மக்களின் சமூக வலுவூட்டல் என்பன இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்திற்கு 620 மில்லியன் ரூபாவும், மீன்பிடித்துறைக்கு 230 மில்லியன் ரூபாவும் உட்பட 33 திட்டங்களுக்கு 2371 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டண அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இந்தத் தகவல்களை வெளியிட்ட அமைச்சர், நாட்டுக்குள் மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீடு செய்து வருவதாக தெரிவித்த அவர், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் படிப்படியாக இதில் தலையிட்டு வருகின்றனர் என்றும், தொடர்ந்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

Recommended For You

About the Author: admin