சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல் போயிருப்பது குறித்து பல ஊகங்கள் பரவி வருகின்றன.
டாமஸ்கஸில் இருந்து கடைசியாக புறப்பட்ட சிரிய விமான எண் 9218-ல் தான் சிரிய அதிபர் ஆசாத் சென்றதாக நம்பப்படுகிறது என ஒரு ஓபன் ஃபைளட் டிராக்கர்கள் தெரிவித்த நிலையில் ஆசாத் குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தன.
சிரிய தலைநகரின் விமானநிலையத்தை கிளர்ச்சி படைகள் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்த விமானம் தான் புறப்பட்டுச் சென்றுள்ளது.
விமானங்களின் தரவுகளின்படி, வடக்கு நோக்கி திரும்புவதற்கு முன்பாக அந்த விமானம் தொடக்கத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. சிறிது நேரத்தில் ஹோம்ஸ்க்கு மேலே வட்டமிடும் போது அந்த விமானத்தின் சமிக்ஞைகள் காணாமல் போயின என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் விமானம் காணாமல் போனது குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம்வரத்தொடங்கியுள்ளன.
விமானம் சென்ற பாதை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் உட்பட பல ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் விமானம் தீப்பிடிப்பது போன்ற, விபத்துக்குள்ளானது போன்ற உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் வலம் வரத்தொடங்கியுள்ளன.
ஏவுகணைத் தாக்குதல் அல்லது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வேகமாக உயரம் இழந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு பயனர் கூறுகையில், “விமானம் திடீரென காணாமல் போயிருப்பது, அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற பயனர்கள், விமானம் வேகமாக உயரம் இழந்ததைக் காட்டும் 3டி விமான ரேடார் தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர் கூறுகையில், “ஒரு விநாடிகளில் 6,700 மீட்டர் உயரம் குறைந்திருப்பது ஆசாத்தின் விமானம் விபத்துக்குள்ளானதை குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே விமானம் தீப்பிடித்து எரியும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.
தப்பியோடிய சிரிய அதிபர்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் கிளர்ச்சி படைகளின் வசம் ஆனதால் அதிபர் பஷார் அல் – ஆசாத்து தலைநகரை விட்டு விமானத்தில் தப்பியோடிய நிலையில், டாமஸ்கஸைக் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.
தலைநகரை விட்டு அரசுப்படைகள் வெளியேறி விட்டதால், டமாஸ்கஸ் நீண்டகால ஆட்சியாளரான ஆசாத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்தனர். பஷார் அல் ஆசாத் தப்பியோடிவிட்டார். ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து டமாஸ்கஸ் விடுவிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 27-ம் தேதி, சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். ஒருவாரகாலத்தில் கிளர்ச்சிப் படைகளின் கை வேகமாக ஓங்கி இன்று தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது.
முன்னதாக,கிளர்ச்சிப் படையினர் சனிக்கிழமை கடந்த 2000 ஆண்டு முதல் ஆசாத் ஆட்சி செய்து வரும் டமாஸ்கஸை சுற்றிவளைத்திருப்பதாக அறிவித்தனர். “நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம்.
ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர். அன்று இரவு அவர்கள் ஹோம்ஸை கைப்பற்றியதாக அறிவித்தனர்.
தற்போது தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளக்கள் வசமாகியிருக்கும் நிலையில், 14 மாகாண தலைநகரங்களில், லடாகிய மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.