அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் இருவர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு மெல்போர்னின் அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர், அவர்கள் வந்தபோது கட்டிடம் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்தது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சமூகத் தலைவர்கள், “ஒரு சிலர்” காலை பிரார்த்தனையின் போது உள்ளே இருந்ததாகவும், தீக்குண்டுகள் வீசப்பட்டதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) அந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார். யூதர்களுக்கு எதிரான உணர்விற்கு அவுஸ்திரேலியாவில் இடமில்லை என்றார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் காவல்துறைப் பிரிவு விசாரணை குறித்து விக்டோரியா மாநிலக் காவல்துறையிடம் பேசும் என்று பிரதமர் அல்பனீசி குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலத்தினுள் தீ பரவ உதவும் பொருளை இருவர் காலையில் பயன்படுத்தியதை அங்குச் சென்ற ஒருவர் பார்த்திருக்கிறார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் புலப்படவில்லை என்றும் அது கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ள வேண்டும்.”
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், தீ வைப்பு வேதியியலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தருவார் என்றும் விக்டோரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.