ஹக்கீம், றிஷாத் போன்று இனவாதியாக நடந்து கொள்ள மாட்டேன்! பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கருத்து
தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முழப்பர் உறுதியளித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்திக்கும் தமக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கம்பஹா, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (30.11.2024) மாலை மக்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தில் அதிக நம்பிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வைத்திருப்பதாகவும் 21 அமைச்சுக்களில் மூன்று அமைச்சர்களை கம்பஹாவில் இருந்து நியமித்துள்ளதாகவும், சகோதரர் முனீர் முழப்பருக்கு பொறுப்பு வாய்ந்த பிரதியமைச்சுப்பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பியகமையை சேர்ந்த அசோக்க ரன்வலவை சபாநாயகராக நியமித்து மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததோடு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நம்பிக்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்வது தமது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உரையாற்றிய பிரதியமைச்சர் முனீர் முழப்பர்,
தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று தாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னாள் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.
இன நல்லுறவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது நாடாளுமன்ற உறுப்புரிமை மூலம் நீதமான முறையில் நேர்மையுடன் நடந்து கொள்வதன் ஊடாகவே இனிவரும் காலங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து என்னைப் போன்று முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்று கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள மாட்டேன் எனவும் பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.