25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாக கூறி உள்ளனர்.
விலைவாசியை குறைப்பதற்காக சில அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.