எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம்
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியாவில், நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,
“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள், பல படிப்பினைகளைச் சொல்கின்றன.
அரசாங்கத்தின் எழுச்சி எதிர்பார்த்த அளவு அதிகாரிக்காது என்பது முதலாவது. சாத்தியமாகாதவற்றை கூறிவிட்டு, செய்ய முடியாமல் திணறுவதால் ஏற்பட்ட பின்னடைவு இரண்டாவது. பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாதது என்பது மூன்றாவது.
இவை போன்ற பல விடயங்களை இத்தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறுகின்றன.
எனவே, அமையவுள்ள அரசாங்கம் கூட்டரசாங்கமாகவே அமையப்போகிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு நம்பிக்கையுடன் வாக்களியுங்கள். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரானவர்கள் என விமர்சிக்கப்பட்ட சம்பிக்க ரணவக்க எங்களுடன் இல்லை. சன்ன ஜயசுமனவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.
தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தால், அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பம் எமக்கே கிடைக்கும். வன்னியில் போட்டியிடும் சகோதரர் ரமணனுக்கு வாக்களித்தால், எமது கட்சி 4 அல்லது 5 ஆசனங்களை வெல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்” என்றார்.