க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும், 5ம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ளதன் படி புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரையும் இடம்பெறும்.
மேலும், பரீட்சை நடைபெறும் இத்தினங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை சகல அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அறியத்தருகின்றேன்.
அத்தோடு இவ்வாண்டுக்குரிய பாடசாலை தவணை அட்டவணைக்கமைவாக விடுமுறை காலத்தில் டிசம்பர் மாதத்தில் இப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எக்காரணத்திற்காகவேனும் இவ்விரு பரீட்சைகளையும் பிற்போட வேண்டியேற்படின் பாடசாலை தவணை அட்டவணைக்குரிய பாடசாலை நடைபெறும் தினங்களும் மாற்றம் செய்யப்பட வேண்டியேற்படும் என்பதுடன் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற பரீட்சைகளையும் பிற்போட வேண்டியேற்படும்.
மேலும், எவ்வாறாயினும் இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்கள் மாத்திரமின்றி இளந்தலைமுறையினரது எதிர்கால உயர்கல்வி நடவடிக்கைகளுக்கும் தொழில் கல்வி வாய்ப்புக்களுக்கும் பாதகம் ஏற்படலாம்.
எனவே சகல பரீட்சாத்திகளும் உரிய திகதியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.