அனைத்து விமான நிலையங்களுக்கும் தீவிர பாதுகாப்பு!

இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை இறக்கி சோதனை செய்துள்ளனர்.

இந்த சம்பவங்களினால் யாரேனும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தால் வருந்துகிறோம் என்று விமான நிலையமும் விமான நிறுவனமும் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்திய விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்று மட்டும் சுமார் 80 தவறான அறிவிப்புகள் வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலை காரணமாக, இந்த போலி அச்சுறுத்தல்கள் குறித்து செய்திகளை வழங்கும் நபர்களின் தகவல்களை மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Recommended For You

About the Author: admin