“அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்”
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
அங்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் பதவி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சிக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குமா என கேட்பதாகவும், அது கிடைத்தால் அந்த அடையாளத்துடன் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.