ஜனாதிபதி வேட்பாளராக அழைப்பு கிடைத்தால் இலங்கை மக்களுக்காக அதற்கு தயாராக இருப்பதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்காக, மக்களுக்காக ஜனாதிபதியாக அல்ல நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் தெரிவித்த தேரர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பொதுமக்களிடமிருந்து தனக்கு அதிகளவு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் என்பது தனியாக எடுக்கப்படும் தீர்மானம் அல்ல என்பதால் அது பெரிய ஒரு குழுவுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்வது ஒரே குழு என தெரிவித்த வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் இந்த நிலை முழுவதுமாக மாற்றமடைய வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் பௌத்த துறவிகள் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆட்சியாளர்களுக்கு அர்த்தமுள்ள தர்ம உபதேசங்களை வழங்குவதே பௌத்த துறவிகளின் கடமையே அன்றி அரச நிர்வாகத்தில் சம்பந்தப்படுவதற்காக நாடாளுமன்றத்திற்குச் செல்வதல்ல என அவர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.