இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 66 (ஏ) பிரிவின்படி, 2024 ஜூன் 30 முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் காலமானதை இந்த நாடாளுமன்றத்திற்கு மிகவும் வருத்தத்துடன் தெரிவிப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அனுதாபப் பிரேரணை பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டிள்ளார்.
இதேவேளை, சம்பந்தனின் பூதவுடல் நாளை (03) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நாடாளுமன்ற பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் இரவு காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.