தெற்கு இத்தாலியில் இரண்டு படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் புலம்பெயர்ந்தோர் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேர் காணாமற் போயுள்ளனர்.
நாதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜேர்மன் உதவிக் குழு 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
“எங்கள் எண்ணங்கள் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியது.நாங்கள் கோபமாகவும் சோகமாகவும் இருக்கிறோம்,” என அந்த மீட்புக்குழு அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோரக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,காணாமற்போனோரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்களின் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளானதுடன் மற்றைய புலம்பெயர்ந்தோரின் படகு பகுதியளவு மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் மத்தியத் தரைக்கடலில் 23,500 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இது உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றென கூறப்படுகின்றது.