பிரித்தானிய தேர்தல் காலநிலை நெருக்கடிக்கு முக்கியத்துவம்

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான தொலைக்காட்சி விவாதங்களில் காலநிலை நெருக்கடி குறித்து முன்னுரிமை அளித்து விவாதிக்கப்பட வேண்டும் என பசுமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேரடி விவாதங்களை நடத்துவதற்கு எதிர்பார்க்கும் தொலைக்காட்சி சேவைகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் அனைத்து மக்களிடையிலும் காலநிலை நடவடிக்கைகளுக்கான ஆதரவு மிகவும் அதிகமாக உள்ளது என குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டபூர்வ காலநிலை மற்றும் இயற்கை இலக்குகளை எதிர்கொள்வதற்கு முக்கிய கட்சிகளின் திட்டங்கள் சரியாக ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும், குழப்பங்கள் மற்றும் உட்பூசல்களில் இருந்து விலகி உண்மையான பிரச்சினைகளுக்கு பிரசாரங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட்ட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

காலநிலை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் எனவும் செலவுகளை குறைக்கலாம் எனவும் பசுமை குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்த்ன் போது பிரித்தானியாவின் அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களிடையிலும் ஒரு மணிநேர காலநிலை விவாதத்தினை சேனல் 4 நடத்தியிருந்தது.

இந்த நிலையில், இம்முறை சுனக் மற்றும் ஸ்டார்மருக்கு இடையில் நேருக்கு நேர் விவாதமொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தின் போதே காலநிலை நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்துமாறு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin