9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது.
தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 61 ரன்களும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஸ்டீவன் டெய்லர் இன்னிங்சின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மோனங்க் படேல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கை கோர்த்த அண்ட்ரீஸ் கவுஸ் – ஆரோன் ஜோன்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அமெரிக்க அணியை வெற்றி பெற வைத்தது.
வெறும் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அமெரிக்கா 197 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய அண்ட்ரீஸ் கவுஸ் 65 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களும் குவித்தனர்.