உள்நாட்டு போரின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் நயவசஞ்கத்துடன் செயறப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பில் அக்கறை காட்டும் இலங்கை அரசாங்கம், அந்த அக்கறையை இலங்கை தமிழர்கள் மீது ஏன் காட்டவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (14.05.2024) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை மிக மோசமாகவுள்ளது. இஸ்ரேல் உடனான போரில் அதிகளவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களும், பெண்களும் அடங்குவர்.
இது போன்ற நிலைமையை இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் எதிர்கொண்டனர். 2009 மே மாதம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறும் வகையில் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இறுதிப் போரில் போர் வலையத்திற்குள் சிக்கியிருந்த நான்கு லட்சம் மக்களுக்கு உணவு கிடைத்திருக்கவில்லை. அப்போது வெறும் உப்பில்லா கஞ்சியை மட்டுமே அருந்தினர்.
அதனை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் கஞ்சி வழங்கப்படுகின்றது. எனினும், அதற்கு தடையேற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கஞ்சி வழங்கியதற்காக சம்பூர் பகுதியில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றின் ஊடாக தடை உத்தரவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், பாலஸ்தீன மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
பாலஸ்தீன மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளவர்கள் ஏன் தமிழ் மக்கள் மீது பாரபட்டம் காட்டுகின்றீர்கள். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதேசமயம் 15 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பாலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தும் இலங்கை அரசு, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்ளக விசாரணையை வலியுறுத்துவது ஏன்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.