இஸ்ரேலிய இராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை இன்று திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலிய வானொலி ஒன்று, இத்தகவலை வெளியிட்டுள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பப்படும் வேளையில் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக அந்த வானொலி குறிப்பிட்டது.
மனிதாபிமான வட்டாரம் 20 கிலோமீட்டர் தொலைவில்
ராஃபாவின் சில வெளிப்புறப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் இஸ்ரேலிய இராணுவம் கவனம் செலுத்திவருவதாகவும் அந்த வானொலி தெரிவித்தது.
வெளியேற்றப்படுவோர் அருகில் உள்ள கான் யூனிஸ், அல் முவாசி நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு இடம் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரபு மொழியில் உள்ள குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் ராஃபாவில் வசிக்கும் பாலஸ்தீனர்களை விரிவுபடுத்தப்பட்ட மனிதாபிமான வட்டாரம் என்றழைக்கப்படும் அருதிக்கு இடம் மாறுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக்கொண்டதாக இந்நடவடிக்கைகளை நேரில் கண்டவர்கள் கூறினர்.
பின்விளைவுகள் இருக்கும்
விரிவுபடுத்தப்பட்ட மனிதாபிமான வட்டாரம் ராஃபாவுக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை பிற்பகல் கிழக்கு ராஃபாவில் பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதாக குடியிருப்பாளர்களும் ஹமாஸ் அமைப்பின் ஊடகத்தைச் சேர்ந்தோரும் கூறினர். சில வீடுகளைக் குறிவைத்து ஆகாயத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ராஃபாவிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை அபாயகரமான முறையில் பிரச்சினையை மோசமடையச் செய்வதாகும் என்று ஹமாசின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதற்குப் பின்விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ராஃபாவில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர் என்றும் அந்நகரைத் தன்வசம் கொண்டுவராமல் போரில் தாங்கள் வெற்றி காண வாய்ப்பில்லை என்றும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இஸ்ரேல் தோல்வியடைவதற்கு ஈடாகும்
ராஃபாவில் பாலஸ்தீனர்கள் சிலர் பிள்ளைகளையும் உடைமைகளையும் கழுதை வண்டிகளில் ஏற்றி வெளியேறினர். வேறு சிலர் மழையால் நீர் தேங்கிய சாலைகள்வழி நடந்தும் சென்றனர்.
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பலரை பலிவாங்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய நாடுகளும் அண்டை நாடான எகிப்தும் கவலை அடைந்துள்ளன.
காஸாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு வகைசெய்யும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்நிலையில், போரை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அது இஸ்ரேல் தோல்வியடைவதற்கு ஈடாகும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்துப் பேசிய கத்தாரில் இருக்கும் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, நெட்டன்யாகு பேச்சுவார்த்தை சரியாக நடக்கவிடாமல் செய்வதாகக் கூறியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, எகிப்தின் கெய்ரோவில் நடந்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒரு முன்னேற்றத்தை உருவாக்கத் தவறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் தடை செய்ததாக குற்றம் சாட்டிய ஹமாஸ், போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வராத போர் நிறுத்தத்தை ஏற்க மாட்டோம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து கத்தாரில் இன்று பேச்சுகள்
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காஸா போரை நிறுத்துவதற்கான ஹமாஸின் கோரிக்கைகளை நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
போர் நிறுத்தம் பாலஸ்தீனிய போராளிக் குழுவை அதிகாரத்தில் வைத்திருக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் குறித்து கத்தாரில் இன்று பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
என்றாலும், இதற்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என்பதுடன், ரஃபா மீது அதிபயங்கர தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.